Friday, 17 March 2017

2.O ரூ 110 கோடி வியாபாரம்

டீசர் வெளியிடுவதற்கு முன்பே ரூ நூறு கோடியைத் தாண்டமுடியும் என்றால் அது தலைவர் (ரஜினி) படத்தால் மட்டுமே முடியும் என்று லைக்கா நிறுவனத்தின் தலைமை அதிகாரி ராஜூ மகாலிங்கம் ட்வீட் செய்துள்ளார். ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.O-வின் (எந்திரன் படத்தின் 2-ம் பாகம்) படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை ரூ. 350 கோடி செலவில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினியுடன் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், கதாநாயகியாக ஏமி ஜாக்சன் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார்.



இன்னும் 2.0 படத்தின் டீசர், அல்லது புகைப்படங்கள் (இரண்டு மட்டுமே வெளியாகியுள்ளது) வெளியிடப்படாத நிலையில், படம் தொடர்புடைய வியாபாரங்கள் ஆரம்பித்துவிட்டன. தீபாவளிக்கு வெளிவரவுள்ள 2.0 படத்தின் தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளுக்கான முதல் 15 வருட தொலைக்காட்சி உரிமம், ஜீ குழுமத்துக்கு ரூ. 110 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது தெரிந்ததே. இது தொலைக்காட்சி உரிமம் மட்டும்தான். அதுவும் 15 வருடங்களுக்கு மட்டும்தான். டிஜிடல் உரிமங்களுக்காக அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் போட்டி போடுவதாக லைக்கா நிறுவனத்தின் தலைமை அதிகாரி ராஜூ மகாலிங்கம் கூறியுள்ளார். மேலும் அவர் ட்விட்டரில் இதுகுறித்த செய்தி ஒன்றைப் பகிர்ந்து, 'நம்ம தலைவரால் (ரஜினி) மட்டுமே டீசர் வெளியிடுவதற்கு முன்பே நூறு கோடியைத் தாண்டமுடியும்,' என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இறுதிக்கட்டத்தில் ரஜினியின் 2.ஓ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.ஓ படம் அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ரூ 350 கோடி செலவில், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாய் உருவாகி வருகிறது 2.ஓ. ரஜினியுடன் அக்ஷய் குமார், எமி ஜாக்ஸன் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வந்தது.
 


இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில்தான் எமி ஜாக்சன், தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்துவிட்டதாக அறிவித்திருந்தார். இன்னும் ஒரு பாடல் மற்றும் சில காட்சிகளே படமாக்கப்பட வேண்டியுள்ளதாகவும், அந்த காட்சிகள் படமாக்கியவுடன் படப்பிடிப்பு நிறைவடைந்துவிடும் என்றும் ஷங்கர் அறிவித்துள்ளார். மேலும், '2.ஓ' படத்திற்காக எடுக்கப்பட்ட முக்கியமான காட்சி படமானவுடன் படக்குழுவினருடன் ஷங்கர் எடுத்துக்கொண்ட புகைப்படைத்தையும் வெளியிட்டுள்ளார். 2017 தீபாவளி வெளியீடாக வருகிறது 2.ஓ!